Wednesday, December 8, 2010

இரண்டு சொட்டுக் கண்ணீர்


நேற்று மாலை வேளையில் ஒரு வேலை விஷயமாக கிராம உத்தியோகத்தரின் சான்றிதழை தேடிக்கொண்டிருந்தேன்.பழைய File கலையெல்லாம் உருட்டிக்கொண்டிருந்த பொது "சுயம்"என தலைப்பிடப்பட்ட ஒரு பத்திரிகை கண்ணில் பட்டது...அது 2001 ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளிவந்ததாகும்.வாசிக்கலாம் என மனம் சொல்ல அதை தனியாக எடுத்து வைத்து விட்டு எனது தேடலில் மீண்டும் மூழ்கினேன்......

இரவு ஒரு 7.20 இருக்கும் என் வீட்டு தொலைக்காட்சியில் "மகராணி"தொடரில் "ராணி"யின் பழிவாங்கும் படலம் "தொடர்ந்து தொடர்ந்துக்கொண்டே"இருந்தது......
அதை பார்க்க விருப்பமில்லை,,,அங்கிருந்து விலகி என் அறை நோக்கி வந்தேன்..வரும் வழியில் கண்ணில் பட்டது எடுத்து வைத்த "சுயம்"

"சுயத்தை"வாசித்த பொது அதில் அதிகமாக அந்த கால கட்டத்தில் குறிப்பிட்ட பாடசாலை ஒன்றில் நிகழ்ந்த குறிப்பிட்ட சம்பவம் ஒன்று தொடர்பாக அதிகமாக எழுதப்பட்டிருந்தது....

அதன் கடைசி பக்கத்தில் "இரண்டு சொட்டுக் கண்ணீர்"எனும் தலைப்பில் ஓர் சிறுகதையும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.அதை வாசித்ததும் உங்களுடன் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும் என என்னுள் தோன்றவே இதோ இந்த "POST"உங்களுக்காக.......

"கெம்பஸ் கெடச்சிடும்...கெம்பஸ் கெடச்சிடும்...க.பொ.த.உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் பயின்று இரண்டு A,இரண்டு B என பெறுபேறு வந்த பூரிப்பில் ஆர்ப்பரிக்கின்றேன்.

கட்டிப்பிடித்து முத்தமிட்டு என் சந்தோஷத்தில் இறக்கை கட்டி மேகங்களுக்கிடையில் பறக்கும் தம்பி.
"கெம்பஸ் என்றால் என்ன?"-அடுப்போடு கூடிய திண்ணையில் அமர்ந்து சுவரில் சாய்ந்தபடி அப்பாவியாய் கேட்கும் அம்மா.
அவள் காலடியில் அமர்ந்து மடியில் முகம் புதைத்து சொல்கிறேன்,
"கெம்பஸ் என்றால் பல்கலைக்கழகம்.பல்கலைக்கழகம் என்றால் பட்டப்படிப்பு படிக்கும் இடம்.பட்டப்படிப்பு படிச்சா பெரிய வேலை கிடைக்கும்."
என் கண்களில் ஆனந்தக்கண்ணீர்,அம்மாவின் கண்களிலோ கலவரம்.......

"இன்னும் எம்புட்டுக் காலம் படிக்கணும்?"-அம்மா விசனத்தோடு வினவுகிறாள்
"மூணு வருஷம்,B.COM முடிச்சு வந்தால் Bank ல வேலை கிடைக்கும்;காலம் வரும் ,நம் கஷ்டங்கள் எல்லாம் கலைந்து விடும்.நீ பட்ட துயரங்கள் போதும் தாயே.நீ மலைக்கு போக வேண்டாம்.உன்னை நான் காப்பாற்றுவேன்."

"சரி உன் படிப்புக்கு பெரிய செலவாகுமே!"-அம்மா அங்கலாய்க்கிறாள்.
"யாருகிட்டயாவது கேட்கலாம்.நமக்கின்னு நாலு பேர் இல்லாமலா போயிடுவாங்க?"என்று நம்பிக்கையோடு சொல்ல "சரி எங்க வயித்துக்கு.....எங்க வயித்துக்கு யார் கிட்ட கேட்கிறது?".என்ற அம்மாவின் கேள்வியில் பொட்டிலடித்தாட் போல் நிமிர்கிறேன்.அம்மா தொடர்ந்தால்.

"ஆமா தாயி.இந்த வருஷத்தோட பென்ஷன் எழுதிரலாம் னு நெனக்கிறேன்.என்னால் வர வர மலைக்கு போக முடியல.கை,கால் எல்லாம் நடுங்குது.ஒனக்கு ஒரு வேல கெடச்சிட்டா வீட்ல இருக்கலாம்னு யோசிச்சேன்.நீ இன்னும் மூணு வருஷம் படிகனுங்கிறியே!"

தம்பி மேகங்களுக்கிடையில் பறந்தவன் பூமியில் வீழ்கிறான்."என்னம்மா...மலைநாட்லயிருந்து எத்தனைப்பேர் பல்கலைக்கழகம் போறாங்க..அதுவும் தொழிலாளிங்க புள்ளைக....அக்கா ஒரு சாதனை செஞ்சிருக்கா!எத்தனை சந்தோஷமான விஷியம்.நீ என்னடான்னா கவலைப்படுறியே."
நீயும் அக்கா மாதிரி படிக்கணும்னு தாண்டா எனக்கும் ஆச,ஆனா நமக்கும் வயிருன்னு ஒன்னு இருக்குதே!பசிக்குமே!"

"அக்கா,நான் பிரைவேட்டா ஓ,எல் எழுதறேன்.அடுத்த மாசம் புதுசா பொடியன்கள பதியிறாங்கலாம்.நான் பேர் பதிஞ்சிக்கிறேன்.நீ கெம்பசுக்கு போ"-என்றான் பத்தாம் வகுப்புத் தம்பி பாலு.

"லொக்...லொக்...லொக்..-மூவரும் திடுக்கிட்டுத் திரும்புகிறோம்.உள்வீட்டுக் கட்டிலில் படுத்தபடியே இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்க வாதத்து அப்பா தென்னவன் இருமுகிறார்.

மூவரும் ஓடி கைத்தாங்கலாகத் தூக்கி தலையணையை சுவருக்கு முட்டு வைத்து அப்பாவை உட்கார வைக்கிறோம்.நான் மார்பைத் தடவ,தம்பி சலியை துப்ப சிரட்டையை கொடுக்கிறான்.
அப்பா இருமிக் கொண்டே சொல்கிறார்."நீங்க பேசினதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டு தாம்மா இருந்தேன்.நீ கட்டாயம் படிக்கப் போ.நான் இன்னும் ரெண்டு மாசத்துல செத்துருவேன்...அதுக்கப்புறம் சங்கத்துல கொஞ்சம் காசு கொடுப்பாங்க,நண்பர்களும் பணம் சேர்த்து கொடுப்பாங்க.அத வச்சு நீ பொழச்சுக்க."

வார்த்தைகளின் சோகம் உள்ளத்தை தாக்கி கண்ணீரை வரவழைக்க ஸ்தோப்பிற்கு வருகிறேன்.
-மலையேறி தளிர் பறித்து படிக்க வைத்த அம்மா.
-தன் படிப்பை பணயம் வைத்து படிக்கச்சொள்ளும் தம்பி
-செத்த பிறகு வரும் சங்கப் பணத்தில் என் வாழ்க்கைக்கு ஒளி ஏற்றத் துடிக்கும் அப்பா.....

ஒரு முடிவிற்கு வருகிறேன்.பல்கலைக்கழகம் போவது இல்லை.மாறாக படித்த மலையக இளைஞர்-யுவதிகள் அடைக்கலம் புகும் ஆசிரியர் தொழிலுக்கு விண்ணப்பிக்க போகிறேன்.
என்றாலும் திடீரென்று ஒரு பயம் மனசை ஆட்கொள்கிறது.இன்று ஆசிரிய தொழிலுக்கு சமுதாயத்தில் என்ன மதிப்பு இருக்கிறது? கொஞ்ச நஞ்சம் இருந்த மதிப்பும் மரியாதையும் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடந்த சம்பவங்களால் அடியோடு இல்லாமல் பொய் விட்டதே!இந்த நிலையில் ஆசிரியத் தொழிலை தேர்ந்தெடுப்பது சரி தானா?

இப்படி யோசித்தாலும் என் ஆழ்மனதின் அலாரம் வேறு விதமாக அடித்தது.நான் ஏன் சமுதாயத்திட்கு பயப்பட வேண்டும்?ஆசிரியர் எல்லோரும் பொல்லாதவர்கள் அல்லவே.உண்மையான ஆர்வத்தோடும்,உயர்ந்த மனப்பான்மையோடும்,உள்ள உறுதியோடும் மலையக மாணவர்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் ஆசிரியர்கள் தான் எத்தனை எத்தனை!
நான் ஏன் அவர்களை உதாரணங்களாய் கொள்ளக்கூடாது?

ஆசிரியப் பணியின் தாற்பரியத்தை,அதன் புனிதத்தை,மகத்துவத்தை புரியாத சிலர் ஆசிரியர் என்னும் போர்வையில் செய்யும் மிலேச்சத்தனமான செயல்களால் நான் ஏன் முழு ஆசிரிய சமூகத்தையும் சபிக்க வேண்டும்?
ஆசிரியத் தொழிலுக்கே விண்ணப்பிபோம்:என்னை போன்ற ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்று என் எண்ணங்கள் உயிர் பெறுகையில் என் கன்னங்களில் இரண்டு சொட்டு கண்ணீர் துளிகள்.
ஒன்று:-பல்கலைக்கழகம் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கத்தினால்.
இன்னொன்று:-இந்த லயத்து ஜீவன்களின் பாசப்பினைப்புகளினால் ஏற்பட்ட தாக்கத்தினால்.
-டேசி மலர்-நோர்வூட்.

No comments:

Post a Comment